இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா தன் 15 மாத குழந்தையை விட்டு பிரிந்து வந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா டெஹாரியா ஐரோப்பாவின் மிக உயரமான மலைசிகரமான எல்ப்ரஸ் மலையில், இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிந்த்வாரா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள தமியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் டெஹாரியா. இவருடைய வயது 30 ஆகும். இந்த பெண்மணி, ஆகஸ்ட் 15ம் தேதி மலைசிகரத்தை அடைய சரியாக திட்டமிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் 5,642 மீட்டர் உயரமான சிகரத்தில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்காக பயணித்துள்ளார் இந்த வீர மங்கை. சில நேரங்களில் அங்கு வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் பயங்கர வேகமாக காற்று வீசும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவர் இதற்காக பல நாட்கள் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய 15 மாத குழந்தையை விட்டு பிரிந்து வந்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ஆகஸ்ட் 10 அன்று பாவனா அடங்கிய மலையேற்ற குழுவினர், ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிலிருந்து மினரல்னி வோடிக்கு பயணம் செய்தனர், அங்கிருந்து அவர்கள் எல்ப்ரஸ் மலைக்கு ஏறத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 5 நாட்கள் கடும் பயணத்துக்கு பின், நேற்று அதிகாலையிலேயே அவர்கள் குழு மலை உச்சியை சென்றடைந்தது. அங்கு அவர் மூவண்ணக்கொடியை நட்டதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறியதாவது, “தான்மேற்கொண்ட பயணங்களில் இதுவே மிகவும் கடினமான ஒன்றாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மே மாதம் 22, 2019 அன்று எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி இவரே. ஆஸ்திரேலியாவில் உள்ள கொஸ்கியுஸ்கோ மலை, ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை சிகரங்களையும் தொட்டு விண்ணுயர சாதனை படைத்தவர் இவர். உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி அங்கு தேசியக்கொடியை பறக்க விட வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டு சாதித்து வருகின்றார் பாவனா.