ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில் பர்வான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இங்கு சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.