நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானைகளோடு சுதந்திரம், குடியரசு தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை நேற்று முதுமலை வனதுறையினர் கொண்டாடினர். இதனை முன்னிட்டு தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அலங்கார தோணங்கள் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பொம்மி, ரகு உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட வளர்ப்பு யானைகள் வரிசையாக அணிவகுத்து நிற்கப்பட்டது. அதன் பிறகு கரும்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட உணவுகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து வனத்துறையினரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அப்போது வன சரகர் மனோகர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மாநகர விஜயன், பவித்ரா, மனோஜ் உள்ளிட்ட வனத்துறையினர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதனை போல வளர்ப்பு யானைகள் துதிக்கையை தூக்கி பிலிறியவாறு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். இதற்கிடையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தேசியக்கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். மேலும் வளர்ப்பு யானைகளுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.