அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே கோதையாறு அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கன்னியாகுமரியில் இருந்து 313 நம்பர் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கோதையாறில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிளம்பி சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக காவல்துறையினருக்கும், போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.