ஐபிஎல் போட்டியை போல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் “லீக்” போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த 20 ஓவர் லீக் தொடரில் விளையாடவுள்ள 6 அணிகளை 6 ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கின்றனர். இவற்றில் சென்னை சூப்பர்கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கி இருக்கிறது. அந்த அணி ஜோகன்னஸ் பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜே.எஸ்.கே.) என அழைக்கப்படுகிறது. 6 அணியும் 17 வீரர்களை தேர்வுசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏலத்துக்கு முன் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம் என போட்டி அமைப்பு குழு தெரிவித்திருந்தது.
எஞ்சிய 12 வீரர்களை செப்டம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜோகன்னஸ் பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூ பிளெசிஸ் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவதால் அவரால் வெளிநாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது. டூ பிளெசிஸ் ரூபாய்.2.98 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனான அவர் 2011 -2015 வரையிலும், 2018-2021 வரை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 38 வயதான டூ பிளெசிஸ் சிஎஸ்கே அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடியிருக்கிறார். இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.
டூபிளெசிஸ் தவிர மேலும் 4 வீரர்கள் ஜோகன்னஸ் பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொய்ன் அலி ரூபாய்.3.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த தீக்சனா (ரூ.1.59 கோடி), வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமரியோ ஷெப்பர்டு (ரூ.1.39 கோடி), தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீரர் ஜெரால்டு கோட்சீ (ரூ.39 லட்சம்) போன்றோரும் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இது தொடர்பாக சி.எஸ்.கே. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இவற்றில் மொயின்அலி, தீக்சனா ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணிக்கு ஆடிவருகிறார்கள். அதுமட்டுமின்றி சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஜோகன்னஸ் பெர்க் சூப்பர்கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். சிம்மன்ஸ், அல்பி மார்கல் போன்றோரும் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.