திருவள்ளூர் அருகே பணத்திற்காக பாட்டியை கொலை செய்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கன்னபாளையத்தை சேர்ந்தவர் மல்லிகா. கணவனை இழந்த இவர் அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மல்லிகா வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், அவரது கழுத்தில் இருந்த 15 பவுன் நகை வீட்டிலிருந்த முப்பதாயிரம் பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரையும், அவரது நண்பன் 17 வயது சிறுவன் ஒருவனையும் கை ரேகைகளின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தனர். அதில்,
கோகுல் என்பவர் மல்லிகாவின் அக்காள் மகளான பிரியா என்பவரின் மகன் என்பதும், மல்லிகாவிற்கு இவன் பேரன் முறை என்பதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று கோகுல் மல்லிகா வீட்டிற்கு சென்று உனக்குத்தான் யாருமில்லை அனாதையாக இருக்கிறாய். உனது பென்ஷன் பணம் உனக்கு உதவாது. எனது தாய் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் அதை எங்களிடம் கொடுத்து விடு என்று தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மல்லிகா பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த கோகுல் நண்பருடன் சேர்ந்து மல்லிகாவை அடித்து துன்புறுத்தி சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, கழுத்து காதில் இருந்த தங்க நகைகள் வீட்டில் இருந்த ரூ 30,000 பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை சிறையில் அடைத்தனர். பணத்திற்காக இளம் சிறுவர்கள் பாட்டியை கொன்று குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.