ஹிங்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்காக மாநில அரசின் சார்பாக வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சாப்பாடு சரி இல்லை எனக்கூறி எம்.எல்.ஏ. பங்கர் உணவு மேலாளரை அறைந்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் உணவு சரி இல்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக கூறிய பங்கர், சாப்பாடு வழங்கப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உணவை தயாரித்த மேலாளரை அழைத்து எம்.எல்.ஏ. அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து தன் செயலை நியாயப்படுத்தி பங்கர் கூறியிருப்பதாவது “இரவு பகலாக உழைக்கும் ஏழை மக்களுக்கு நல்ல சாப்பாடு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு உழைத்து வருகிறது.
எனினும் சில ஒப்பந்ததாரர்கள் ஊழல் செய்கின்றனர். அதாவது உணவில் கத்தரிக்காய், கேரட் இல்லை. அத்துடன் மோசமான அரிசியும், பருப்பும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் உணவில் பூச்சிகள் கிடந்தது. இதுபற்றி முதல்வரிடம் புகார் கூறி, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எங்களுடன் இருந்தனர். அவர்கள் தங்களது குரலை கேட்கவில்லை. மாறாக அடக்குவதில்தான் குறியாக இருந்தனர். இப்போது ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருக்கிறார். இதன் காரணமாக எங்களது குரல்கள் எழ துவங்கி இருக்கிறது. நாங்கள் பால் தாக்கரே தொண்டர்கள். ஆகவே அநீதி எழுந்தால் எங்களது குரலை எழுப்புவோம்” என்று கூறினார்.