முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் பேட்டியால் எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் இருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தரவிட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் அண்மையில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுடன் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமியுடன் இணையும் வாய்ப்பு இல்லை எனவும் கூறியிருந்தார். இதனால் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் கூட்டணி இணைய போவதாக எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த சில நாட்களாக எங்களுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதால் 80 சதவீத தொண்டர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இணைவது குறித்து கட்சி முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பெரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது