முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். என்று மின்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.