காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைகைப்பட உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் விளைநிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் விமான நிலைய அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏகனாபுரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டு பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை எடுக்கக்கூடாது என்று ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பரந்தூர் விமான நிலைய அமைப்பது குறித்து 12 கிராமம் மக்களிடம் கருத்து கேட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணி கூட்டத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு ஏ.வ.வேலு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்து கொண்டு கருத்து கேட்பார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் கிராம மக்கள் 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டதால் அவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கருத்து கேட்பு கூட்டம் நண்பகல் 12 மணியை கடந்தும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கருத்துக்கணிப்பு கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்கள் திடீரென அகற்றப்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கொந்தளித்தனர். உடனே அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கண்டனம் கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.