கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைகள் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் ஆயுள் சிறைத் தண்டனையை குறைத்து விடுதலை செய்யுமாறு குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது “டெல்லி செங்கோட்டை சுதந்திரதின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, பெண் சக்தியைப் போற்றிப் புகழ்ந்தார். பிரதமர் சொல்லிய வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா..? பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, அதிகாரம் வழங்குதல் குறித்த அவரது வார்த்தைகளில் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறாரா என்பதை நாட்டுக்கு கூற வேண்டும்” என வலியுறுத்தினார். அத்துடன் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 கைதிகளை குஜராத் பா.ஜ.க. அரசு விடுவித்திருப்பது, அந்த அரசின் மன நிலையை காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.