குஜராத் மாநிலத்தில் சென்ற 2002 ஆம் வருடம் கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சென்ற 15 வருடங்களாக சிறையிலிருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது.
இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு பின் பயம் அதிகரித்து இருப்பதாக பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் படேல் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “முன்னதாக பயம் குறைவாக இருந்தது. தற்போது 11 குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், பயம் மிகவும் அதிகரித்து இருக்கிறது.
நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதால், நாங்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறோம். இச்சம்பவத்தில் நாங்கள் அனைத்தையும் இழந்தோம். எங்கள் 3 வயது மகள் கொல்லப்பட்டார். அத்துடன் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அந்த மோசமான சம்பவத்தை பில்கிஸ் எதிர் கொண்டார். இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் இறந்த எங்களது குடும்ப உறுப்பினர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என அவர் தெரிவித்தார்.