தேசியக்கொடியை ஏற்ற மறுத்த ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேடர அள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, மாணவர்-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அனைவரும் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வியை தேசியக்கொடி ஏற்றுமாறு கூறியுள்ளனர்.
அதற்கு அவர் நான் பின்பற்றும் மத நம்பிக்கையின் அடிப்படையில் என்னால் வேறு எந்த அடையாளத்தையும் வழங்க முடியாது. எனவே நான் தேசியக்கொடியை ஏற்ற மாட்டேன். எனக்கு பதிலாக ஆசிரியர் முருகன் தேசிய கொடியை ஏற்றுவார் என கூறியுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தமிழ்செல்வியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அங்க உத்தரவின்படி கல்விதுறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.