அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டு கடந்த ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்துள்ளது.இந்நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான தேசிய சுகாதார ஆணையம் கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இனப்பெருக்கு ஆரோக்கியத்திற்கான செலவினங்களை அதிகரிக்கவும் நாடு முழுவதும் குழந்தை பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு அறிவுறுத்துதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மானியங்கள், வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு,இளம் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வீட்டு கடன் வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாகாணங்களும் வரி வீட்டுக் கடன் மற்றும் கல்வி சலுகைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.