அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள இந்த நல்ல நேரத்தில் கடமைப்பட்டிருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றமானது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது அ.தி.மு.க-வுக்கு கிடைத்த முழுமையான வெற்றி ஆகும். இந்த வெற்றியை 1 1/2 கோடி தொண்டர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன். அ.தி.மு.க-வை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜியாரும் ஜெயலலிதாவும் உருவாக்கினர். தொண்டர்கள் எதை விரும்பினார்களோ அதுதான் நடந்துள்ளது என கூறினார். அத்துடன் அனைவருமே ஒன்றுபட வேண்டும் என்றும் நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.