Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் கிளாம்பாக்கம்…. அடுத்தடுத்து வரப்போகும் புதிய திட்டங்கள்…. இதோ முழு விபரம்….!!!!

சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல தொலைதூர மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ப்ளூ லைன் மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீடிக்க உள்ளனர். இந்த மெட்ரோ ரயில் வசதியால் பயணிகள் வெகுவிரைவில் பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம்.

மேலும் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில் புதிய வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவைகளும் வந்து விடும் என்பதால் கிளாம்பாக்கம் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக சென்னையின் பல பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தாம்பரம் -செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் சிப்காட் பகுதியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரை புறநகர் ரயில் சேவை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரம் 34 கிலோமீட்டர் ஆகும். இந்த பகுதிகளுக்கு பேருந்தில் சென்றால் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் ஆகும். அதுமட்டுமின்றி 2 அல்லது 3 பேருந்துகள் மாற வேண்டிய சூழலும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் புறநகர் ரயில் சேவையை அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ராயல் என்ஃபீல்டு, சாந்தார், டெல்பி டிவிஎஸ் டீசல் சிஸ்டம்ஸ், நோக்கியா, நிசான், மிண்டாரிக்கா, யமஹா மோட்டார்ஸ், டால்மியா இந்தியா கமர்சியல் வெஹிகிள்ஸ், போஸ்ச் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், அப்போலோ டயர்ஸ் போன்ற ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்களும் செயல்பட்டு வருவதால் ஒரகடம் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் 4 இணைக்கும் சாலை திட்டமும், ஸ்ரீபெரும்புதூர் வரை புதிய சாலை அமைக்கும் பணி தொடர்பான திட்டமும் இருப்பதால், புறநகர் ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டால் கிளாம்பாக்கம் வேற லெவலில் மாறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |