Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள்…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி அருள்மலையில் பழமையான ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த மலைக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு 5 உலோக சிலைகளை புதிதாக அமைப்பதற்கு பக்தர்களின் பங்களிப்போடு நிதி திரட்டப்பட்டது. அதன்பிறகு அந்த நிதியின் மூலம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதி ஆகிய 5 உலோக சிலைகள், சுவாமி மலையில் உள்ள புகழ்பெற்ற சிற்பி மூலம் செய்யப்பட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந்தேதி அதிகாலை கோவிலுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கு பணியில் இருந்த பூசாரிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு கோவிலில் இருந்த 5 சாமி சிலைகளையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில அருள்மலை கோவிலில் கொள்ளையடித்த சாமி சிலைகளை சிலர் ரூ.12 கோடிக்கு விற்க முயற்சிப்பதாக தென்மண்டல சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் படி, சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீசார், சிலைகளை விற்க முயன்ற நபர்களை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது சாதாரண நபர்கள் போல் அவர்களிடம் பேசி, சிலைகளை வாங்கிக்கொள்வதாக கூறினர்.எதிர்முனையில் பேசிய நபர்கள், திண்டுக்கல் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறினர். அதன்படி சிலைகளை வாங்குபவர்கள் போல் போலீசார் மாறுவேடத்தில் திண்டுக்கல்லுக்கு சென்றனர்.

இந்நிலையில் அங்கு சிலைகளை விற்க முயன்ற திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (42), பாண்டியன்நகரை சேர்ந்த தினேஷ்குமார் (24) ஆகிய புரோக்கர்களை போலீசார் அணுகினர். அப்போது அருள்மலை கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 5 சிலைகளை புரோக்கர்கள் காட்டினர். உடனே போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து 4 பேர் கைது செய்தனர்.  அதன்பிறகு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முள்ளிப்பாடியை சேர்ந்த யோவேல் பிரபாகர் (31), ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த இளவரசன் (38), சீலப்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வெங்கடேசன், சேகர் ஆகியோர் சிலை திருட்டில் ஈடுபட்டதும், அதை புரோக்கர்களான பால்ராஜ் மற்றும் தினேஷ்குமார் மூலம் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து பால்ராஜ், தினேஷ்குமார், யோவேல் பிரபாகர், இளவரசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 சாமி சிலைகளை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |