கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் வருடம் இளங்கலை கணிதம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி தன் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி தன் கணவருக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார்.
அதன்பின் அங்கு வந்த மாணவியின் கணவர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மர்ம நபர்கள் இருவரையும் தர்ம அடி கொடுத்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி துணை பேராசிரியர் சிவகுமார் மற்றும் இவரது நண்பர் விருத்தாசலம் அருகேயுள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.