லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஊரக வாழ்வாதார இயக்க மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெறுவது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இங்கு மல்லிகா(46) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த மகளிர் குழு தலைவியான ராஜலட்சுமி என்பவர் தாட்கோ மூலம் 5 லட்ச ரூபாயை கடன் பெற விண்ணப்பித்துள்ளார். இந்த கடனுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக மல்லிகா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அப்போது தன்னிடம் பணம் இல்லை என ராஜலட்சுமி கூறியுள்ளார். இதனால் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மல்லிகா கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜலட்சுமி மல்லிகாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மல்லிகாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.