மாநகராட்சி மேயர் மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்தார்.
திருப்பூர் மாநகராட்சியின் மேயராக தினேஷ் குமார் என்பவர் இருக்கிறார். இவர் மக்களுடன் மேயர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 49-வது வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு மாநகராட்சி மேயர் சில பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு, அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்தார். இவர் பள்ளியில் ஆய்வு செய்தபோது மாணவர்கள் கழிப்பறை வசதி மற்றும் வகுப்பறை வசதி வேண்டும் என்று கூறினர்.
இதற்கு மாநகராட்சி மேயர் ஒவ்வொரு பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கழிப்பறை வசதிகள் மற்றும் வகுப்பறை வசதிகள் கூடிய விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றார். இந்நிலையில் மக்களுடன் மேயர் என்ற திட்டத்தின் மூலமாக பொது மக்களை நேரடியாக அவர்களின் குறைகளை கேட்டறிவது வரவேற்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு குரல் புரட்சி திட்டம் என்ற டிஜிட்டல் குறைதீர் சேவையை மேயர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் தங்களுடைய குறைகளை 155304 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 7305712225 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் மாநில அளவில் மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழும் திருப்பூர் மேயரை பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டி வருகின்றனர்.