தேனி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை அடுத்த பூக்கார தெருவில் வசித்துவரும் பரமசிவம் என்பவரின் மகன் மதுரைவீரன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஊரின் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை கூற, அவர்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இது குறித்த வழக்கானது தேனி மகளிர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்,
வழக்கிற்கான தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டது. அதில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை ரூபாய் 10 ஆயிரம் அபராதம் என 30 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினரால் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.