தஞ்சாவூர் அருகே கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினர் தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவரது வீட்டில் கூலி படையினருக்கு இவர் அடைக்கலம் கொடுத்துள்ளதாக வந்த தகவலின் பேரில் கூலிப்படைக்காவே அமைக்கப்பட்ட தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர்.
அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி பாண்டி திருச்சியை சேர்ந்த ராஜா திண்டுக்கல்லைச் சேர்ந்த விக்னேஷ் அரியலூரை சேர்ந்த ராஜபாண்டி அம்மன் பேட்டையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கூலிப்படையினர் என்பது தெரியவர, அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவர தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் 5 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது அவர்கள் மத்திய சிறையில் அதிகாரிகளால் அடைக்கப்பட்டனர்.