கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எச்சரிக்கை இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும் மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. அதனை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய இந்த பேனர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்துமத ஆதரவாளர்கள் கிராம மக்களின் செயல்பாடுகளுக்கு வரவேற்பும் மதசார்பினை போற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றார்கள். இது பற்றிய சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது அண்மையில் சிலர் காடுவெட்டி பாளையம் பகுதியில் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை அனுமதி இன்றி ஊராட்சி நிர்வாகத்திற்குள் தெரியாமல் இந்த பேனரை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கோவை அண்மை காலமாக போஸ்டர் சர்ச்சை நகரமாக மாறி வருகின்றது. கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி ஓட்டிய எதிர்க்கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகம் ஆளும் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்களை கவனிக்காமல் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அதிமுகவினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதில் தற்போது இந்து மக்கள் வாழும் பகுதி என ஏதோ தனி நாடு போல் வைக்கப்பட்டிருக்கும் பேனர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.