கும்பகோணம் அறுவடை இயந்திர வாகனத்தின் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை அடுத்துள்ள விட்டள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவரது கணவர் மனோகரன். விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் அவரது உறவினரான ஒருவரது நிலத்தை நீண்டகாலமாக பராமரித்து வருகிறார்.
இந்த வருடம் அதில் நெல் பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இவர் பராமரித்து வந்த நிலத்தை அவரது உறவினரிடம் கேட்காமலேயே வேறு ஒரு நபரிடம் விற்றுவிட்டார். இதையடுத்து நிலத்தை வாங்கிய நபர் அறுவடை செய்வதற்காக மனோகரின் உறவினரை அணுகி அறுவடை இயந்திரத்தை ஏற்பாடு செய்தார்.
அதன்படி மயிலாடுதுறை அருகே இருந்து அறுவடை எந்திரம் காளிமுத்து என்ற டிரைவரால் கொண்டுவரப்பட்டு நிலத்தில் அறுவடை பணி தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மனோகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நிலத்திற்குச் சென்று டிரைவர் காளிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் தகராறு முற்றவே காளிமுத்துவை ஐந்து பேரும் சேர்ந்து தாக்கியதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக காளிமுத்து உயிரிழந்தார்.
இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட மனோகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுவடை இயந்திர வாகன டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.