டென்னசியை சேர்ந்தவர் ரேச்சல் டொலார்ட் – ஜோஷ்வா பிரவுன் என்பவர்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களை இருந்து வந்த நிலையில், போதை பொருள் கடத்திய வழக்கில் ஜோஷ்வா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ரேச்சல் தனது நண்பனை சந்திக்க சிறைச்சாலை சென்றார். அப்போது இருவரும் பேசிவிட்டு வழக்கமாக தங்கள் அன்பை முத்தமாக பரிமாறிக்கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு ரேச்சல் மீண்டும் ஜோஷ்வாவை சந்திக்க சிறைக்கு சென்ற போது அப்போதும் முத்தம் கொடுத்துள்ளார்.
அவர் சென்ற சிறிது நேரத்திலேயே ஜோஷ்வாவுக்கு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், அது பலனளிக்காமல் உயிரிழந்தார். பின்னர் அவரை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், அவர் மெத் (methamphetamine) என்று சொல்லப்படும் போதைப்பொருளால் இறந்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது திடீரென்று ரேச்சல் மீது சந்தேகம் வலுத்தது.
பின்னர் அவரை அழைத்து விசாரித்தபோது முதலில் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், ரேச்சல் மறுமுறை வந்தபோது ஜோஷ்வாவுக்கு முத்தம் கொடுத்ததும், அந்த முத்தம் மூலம் அவரது வாயில் போதைப்பொருளை அனுப்பியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிரமாக நடைபெற்ற விசாரணையில் பலூன் ஒன்றில் போதை பொருளை வைத்து, அதனை தனது வாயில் இருந்து ஜோஷ்வாவுக்கு முத்தம் மூலம் ரேச்சல் பரிமாறிக்கொண்ட போது அதனை ஜோஷ்வா விழுங்கியுள்ளார். அப்போது ஜோஷ்வாவுக்கு ஓவர்டோஸ் ஆகி, உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.
பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இறந்துபோன ஜோஷ்வாவின் சிறைத்தண்டனை காலம் 2029-ம் ஆண்டு வரை இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த மெத் என்று சொல்லப்படும் போதைப்பொருளானது, உலகளவில் போதைப்பொருள் மூலம் இறப்பதற்கு இது தான் காரணமாகும். கடந்த 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 68,000 பேர் இதை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டதால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது