காடை வறுவலில் புழுக்கள் நெளியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று விநாயகம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது விநாயகம் காடை வறுவல் ஆடர் கொடுத்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சர்வர் விநாயகம் கேட்ட காடை வறுவலை கொண்டு வந்துள்ளார். அப்போது விநாயகம் அதை சாப்பிட எடுத்த போது அதில் புழுக்கள் நெளிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விநாயகம் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் அந்த புழுக்களை தனது செல்போனில் வீடியோ எடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் விநாயகம் தான் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த அசைவ ஓட்டலில் ஆய்வு செய்தனர். மேலும் விநாயகம் ஆடர் செய்த அந்த காடை வறுவலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. ஆரணி பகுதியில் அமைந்துள்ள அசைவ ஓட்டல்களில் இதுபோன்ற சுகாதார கேடுகள் அடிக்கடி நடக்கிறது. எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து ஓட்டல்களிலும் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.