கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரியபாடி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்தார். இதனையடுத்து மாடு திடீரென மிரண்டு ஓடியுள்ளது. இதனை பிடிக்க சென்ற விஜயலட்சுமி கால் தவறி அருகில் இருந்த கிணற்றிற்குள் விழுந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான தனசேகர், காமேஷ் ஆகிய 2 பேர் விஜயலட்சுமியை தேடி தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது கிணற்றின் அருகே விஜயலட்சுமியின் செருப்புகள் தனித்தனியாக கிடந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவர்கள் விஜயலட்சுமி கிணற்றிற்குள் விழுந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு விஜயலட்சுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.