சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மந்தவெளியிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில், பேருந்தினுள் இருந்த புதுக் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை ஓட்டுநர் பாலாஜி என்பவர் தட்டி கேட்டுள்ளார்.
இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடி உடைத்ததுடன் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சண்டையிட்டனர். இதையடுத்து கண்ணாடியை உடைத்தது ஓட்டுநர் பாலாஜி சென்ட்ரல் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் புதுக்கல்லூரி மாணவர்கள் 3 பேர், மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் என மொத்தம் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.