சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகளானது பாதிக்கப்பட்டது.
மும்பையிலிருந்து 132 பயணிகளுடன் நள்ளிரவில் சென்னை வந்த பயணிகள் விமானம் கன மழை காரணமாக தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோன்று புவனேஸ்வரிலிருந்து 117 பயணிகளுடன் வந்த விமானம், ஐதராபாத்திலிருந்து 98 பயணிகளுடன் வந்த விமானம் போன்றவை சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்தபடி இருந்தது.
அத்துடன் சென்னையிலிருந்து கொழும்புக்கு போக வேண்டிய 2 விமானங்கள், தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்ல வேண்டிய ஒரு விமானம் என 3 விமானங்கள் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றது. அதன்பின் மழை ஓய்ந்து வானிலை சீரானதும் விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கியது. அதுமட்டுமின்றி பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானமும் சென்னைக்கு வந்தது.