செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வரும் இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வசித்து வருபவர் தினேஷ். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வாங்கிய புது மோட்டார் சைக்கிளுடன் பணிக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில்,
ஒரகடத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிங்கப்பெருமாள் கோவில் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.