ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கரு முட்டை எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் போன்ற 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பாக மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கரு முட்டை எடுக்கப்பட்ட மருத்துவமனை விபரங்களை சேகரித்தனர். அதன்பின் அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
அவ்வாறு விசாரணை முடிந்து மருத்துவ அதிகாரிகள் தங்கள் அறிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தனர். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகிய 2 பேரும் கோவை பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் சிறுமியின் வளர்ப்புதந்தை கோபி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஈரோடு கிளைசிறையில் அடைக்கப்பட்ட டிரைவர் ஜான் பிறகு கோவை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். சிறுமியிடமிருந்து கரு முட்டை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பெண் புரோக்கர் மாலதிக்கு குறிப்பிட்ட தொகையை அவரது வங்கிகணக்கில் செலுத்தி இருந்தது.
பின் மாலதி தனக்கு கிடைத்த பணத்தில் சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தைக்கு ஒரு தொகையை கொடுத்து மீதியை கமிஷனாக அவர் பெற்றுக்கொண்டார். இதன் வாயிலாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையில் சூரம்பட்டி காவல்துறையினர் பெண் புரோக்கர் மாலதியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையிலிருந்து அவரது வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின்படி, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, டிரைவர் ஜான் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவு பிறப்பித்தார்.