கோவை மாவட்ட பொள்ளாச்சி அருகில் உள்ள ஓடையகுளம் ஓ.எஸ்.பி. நகரில் ராஜேந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடைய குளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் கேரள மாநில பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் என்றும் தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டு தொகையை கொடுத்தால் அதற்கு இரு மடங்கு தொகையை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய ராஜேந்திரன் கிணத்துக்கடவு அருகில் உள்ள முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகில் அவரை வரவழைத்து ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அதன் பிறகு அந்த நபர் ரூ.50 ஆயிரத்தை திரும்ப வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ராஜேந்திரனை தொடர்பு கொண்ட அந்த நபர் தன்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறினார். இதனால் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது மைத்தனர் பாலகிருஷ்ணமூர்த்தி மற்றும் சதீஷ்குமார் ஆகியோருடன் முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகில் வந்தார். அதன் பிறகு அங்கு நின்று அந்த நபரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்தார். அந்த நபர் ரூ.10 லட்சத்தை இருப்பதாக கூறி ஒரு பொட்டலத்தை கொடுத்து, வருமான வரி அதிகாரிகள் வர உள்ளனர். எனவே உடனடியாக புறப்படுங்கள் என்று கூறி அவர்களை பயமுறுத்தினார். இதனால் ராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று பேரும் விரைந்து சென்றனர். வீட்டுக்கு சென்ற பிறகு அந்த பொட்டலத்தை பிரித்து பணத்தை எண்ண முயன்ற போது, வெள்ளை காகிதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட போலீஸ் பத்ரி நாராயணன் உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பாலக்காடு அருகில் உள்ள மேனாம்பாறை சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது. அதன்பிறகு செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது கோவை அருகில் உள்ள மரபாலம் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.