கோவிட் தொற்று பரவலின் போது பாராசிட்டமால் மாத்திரையான டோலோ உற்பத்தியாளர்கள் மீது மருத்துவ அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நோயாளிகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு உற்பத்தியாளர்கள் 1,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக் வாதிட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள், டாக்டர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சலுகைகளை வழங்கியுள்ளனர். நியாயமற்ற டோஸ் சேர்க்கைகள் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர்’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிக்கையை மேற்கோள் காட்டி பரேக் வாதிட்டார்.
இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் விலை மற்றும் மருந்து உருவாக்கம் குறித்து கவலை தெரிவித்து, மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் இந்த வழக்கு மீண்டும் பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டோலோ-650 என்பது 650 மில்லிகிராம் பாராசிட்டமால் கொண்ட ஒரு மாத்திரை ஆகும். உற்பத்தியாளர்கள் மற்ற பிராண்டுகளின் 500 mg மாத்திரைகளை விட தங்களின் மாத்திரையின் பலன் அதிகம் என்று கூறுகின்றனர். கோவிட் நோயின் பொதுவான அறிகுறியான காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க மருத்துவர்கள் பொதுவாக பரிந்துரைக்கும் மாத்திரை இது.