தூத்துக்குடி மாநகராட்சி குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் நுண்உரங்களை விற்பனை செய்யும் அடிப்படையில் முத்துரம் என்ற லோகோவை மாநகராட்சியின் மேயர் ஜெகன் வெளியிட்டார்.
தூத்துக்குடியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து எடுக்கப்படுகிறது. இதையடுத்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை 1கிலோ ஒரு ரூபாய் என வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகமானது முடிவு செய்தது. இந்நிலையில் தூத்துக்குடியிலுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இருக்கும் விவசாயப் பணிகளுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் வழங்க முத்துரம் என்ற பெயரில் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சியின் அலுவலகத்தில் நிகழ்ச்சியானது நடந்தது.
இதற்கு மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்று லோகோவை அறிமுகப்படுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு 180 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. அடுத்ததாக குப்பையிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரித்து எடுக்கப்படும். அதனை தொடர்ந்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண் உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. குப்பையிலிருந்து தயாரிக்ககூடிய உரத்தில் அதிக சத்துக்கள் இருக்கும். ஒரு கிலோ உரம் 1.ரூபாய் வீதம் வழங்க மாநகராட்சி நிர்வாகமானது முடிவு செய்துள்ளது” என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.