தமிழ் திரைப்படங்களில் பெரும் பாலும் சென்னையின் அடையாளமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை காட்டுவது வழக்கமான ஒன்றாகும். அதையும் தாண்டி சென்னைக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கிபி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நினைவூட்டும் விதமாகவே கடந்த 2004 ஆம் வருடம் முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனாலும் கூட மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1996 ஆம் வருடம் முதல் ஜூலை 17 அன்று தான் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்ந்து வருகின்றது. அதேநேரம் இவ்வளவு சிறப்பு வாய்ந்த சென்னை சுமார் 382 வருடங்களுக்கு முன் உருவானதாக கூறப்படுகின்றது. அதாவது இந்தியாவில் வணிகம் செய்வதற்கான ஆங்கிலேயர்கள் வந்திருக்கின்றனர். அப்போது வந்தவாசியை ஆண்டு வந்த தாமல் வெங்கடப்ப நாயகரிடம் தற்போது தலைமை செயலகம் அமைந்திருக்கும் கோட்டை பகுதியை கடந்த 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கேட்டு பெற்று இருக்கின்றனர். இதன்பின் நிலம் வழங்கிய உதவிய தாமல் வெங்கடப்ப நாயக்கர் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக அந்த பகுதிக்கு சென்னை பட்டினம் என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்து அழைத்து இருக்கின்றார்கள்.
இந்தியா விடுதலை அடைந்த பின் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் மெட்ராஸ் மாகாணம் எனவே அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. கடந்த 1969 ஆம் வருடம் தமிழக முதல்வராக அண்ணாதுரை இருந்தபோது மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்துள்ளார். இதன் பின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த 1996 ஆம் வருடம் ஜூலை 17ஆம் தேதி மெட்ராஸ் என பெயர் நீக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை என மாற்றப்பட்டு சிங்கார சென்னை திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் சான்றோர்களுக்கு மெரினா கடற்கரையில் சிலைகள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கிண்டி, கத்திப்பாரா, கோயம்பேடு பாடி போன்ற பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் உலக தரத்திலான மேம்பாலங்கள் மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சென்னையின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவ தொடங்கியதால் தமிழ்நாட்டின் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தேடி வருபவரை அரவணைத்து சென்னை பாசமிகு அன்னையாகவே திகழ்ந்து வருகின்றது.
இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கிய சென்னைக்கு மேலும் பெருமை சேர்த்திடும் விதமாக ஒவ்வொரு வருடமும் சென்னை தினம் கோளகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கின்றது. இதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் பேசண்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலை கலை நிகழ்ச்சி நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கின்றது. இதனை முன்னிட்டு சென்னை வாசிகள் மத்தியில் மகிழ்ச்சி கலை கட்டிருக்கிறது.