ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு தொடர்பாக ஒரு நபர் ஆணைய ஓய்வு பெற்ற நீதிபதி டேவிதார் அவருடைய அறிக்கையை இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து கொடுத்துள்ளார்.
2015ல் துவங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நகரம் ஒன்றுக்கு மத்திய அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.. இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை மழை, வெள்ளம் ஏற்பட்ட போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்யும் போது டி.நகர், மேற்கு மாம்பலம் போன்ற பகுதியில் தண்ணீர் அதிகம் தேங்கி இருந்தது. அதற்கு காரணம் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தான் என்று சொல்லியிருந்தார்..
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் யார் யாரெல்லாம் ஊழல் செய்திருக்கிறார்கள் என்ற விவரம் அறிக்கையில் இருக்கிறது. இந்த அறிக்கை வெளிவந்த பின் தெரியவரும். சென்னை, கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்நடந்த இடங்களில் விசாரணை நடத்தி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.