இங்கிலாந்து போக உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொள்கிறது. ஒரு நாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 39 வயதான இவர் கடைசியாக சென்ற மார்ச்மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்து இருக்கிறது. லார்ட்ஸில் இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி அவரது கடைசிப்போட்டியாக இருக்கும் என பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மார்ச் 2002-ல் கோஸ்வாமி தன் முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களில் அவர் 12 டெஸ்ட், 68 டி20 போட்டிகள் மற்றும் 201 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அத்துடன் அவர் ஆறு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் கலந்துகொண்டார். ஒரு நாள் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகள் (252)எடுத்த வீராங்கனை எனும் சாதனையையும் அவர் படைத்து இருக்கிறார்.