லெபனான் நாட்டில் ஐந்து மாத கருவை கலைக்க மறுத்த மனைவியை, கணவன் உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
லெபனான் நாட்டில் உள்ள திரிபோலி என்ற பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஹனா முஹம்மது கோடர் என்ற பெண்ணிடம் அவரின் கணவர் கருவை கலைக்குமாறு வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும், முதல் தடவை தாயாவதால் கருவைக் கலைக்க மாட்டேன் என்று ஹனா உறுதியாக கூறியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த அந்த நபர், எரிவாயு கானிஸ்டரை பயன்படுத்தி தன் மனைவி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனால், உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்டு, ஹனா அலறி துடித்திருக்கிறார். அதன் பிறகு, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவர் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த கொடூர செயலால் அந்த குழந்தை உயிரிழந்ததாகவும் அதனை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்றியதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது நாட்டிலிருந்து தப்ப முயற்சித்த ஹனாவின் கணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.