பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த குறுஞ்செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பைக்கு அருகே உள்ள ஒரு கடற்கரையில் ஆளில்லாத கப்பல் ஒன்று கரை ஒதுங்கியது. அந்தக் கப்பலில் 3 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சொந்தமான கப்பல் என்பதும், ஒரு விபத்தின் காரணமாக நடுக்கடலில் கப்பல் கைவிடப்பட்டு கரை ஒதுங்கியதும் தெரிய வந்தது. இந்த சூழலில் மும்பை போலீசாரின் whatsapp எண்ணிற்கு பாகிஸ்தான் நாட்டின் தொலைபேசி நம்பரில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் 26/11 என்ற தீவிரவாத தாக்குதல் குறியீடும், 6 நபர்களால் பயங்கர தாக்குதல் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.