Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் சாராயம் விற்பனை- காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்..!!

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை பொதுமக்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில், கீழப்பட்டமங்கலம், கேணிக்கரை, ஆரோக்கியநாதபுரம், ஆராயத்தெரு, அண்ணாநகர், சாந்திகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது மதுபானங்களின் விலையேற்றத்தால் மலிவு விலையில் கிடைக்கும், பாண்டிச்சேரி சாராயத்தை (ரூ.50) வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வாங்க வரும் குடிமகன்களின் கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் காலை 6 மணி முதல் விற்பனை நடைபெறுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை மயிலாடுதுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் கீழப்பட்டமங்கலம், திருவாரூர் சாலையில் இன்று காலை பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை அங்கிருந்த இளைஞர்கள் பிடித்து, அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கீழபட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

பட்டப்பகலில் பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை பொதுமக்கள் காவல் துறையிடம் பிடித்துக்கொடுத்தனர். இதன் பிறகாவது காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Categories

Tech |