தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கியது.. இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
அப்போதைய அதிமுக ஆட்சியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.. இந்த விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி முடித்து கடந்த 18ஆம் தேதி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று நேற்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். 18ஆம் தேதி அன்று நீதிபதி சமர்ப்பித்த அறிக்கை 4 தொகுதிகளை கொண்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. துறைகள் நடவடிக்கை எடுத்தபின் அதற்கான அறிக்கை ஆணைய அறிக்கையுடன் பேரவையில் வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.