ஹோட்டலில் திருடிய துப்புரவு பணியாளர் உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் தெற்கு பஜாரில் இருக்கும் பிரபல ஹோட்டலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மைக்கேல்ராஜ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் நாகராஜன் என்பவரது டீக்கடையிலும் சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பேச்சுமுத்து(26), விமல்(28) ஆகிய இருவரும் ஹோட்டல் மற்றும் டீக்கடையில் திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 8000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 39 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பேச்சிமுத்து தனியார் செப்டிக்டேங்க் கிளீனிங் பணியாளராகவும், விமல் நாகர்கோவில் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.