ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (43). மஞ்சூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விரும்பியுள்ளார். இது ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ராஜ்குமார் மனைவியின் சகோதரர் உமாபதி (42), ராஜ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் உமாபதி நகராட்சி இடத்தில் வீடு கட்டியுள்ளார் என தகுந்த ஆவணங்களுடன் அலுவலர்களுக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து அலுவலர்கள் உமாபதியின் வீட்டை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உமாபதி, கடந்த 25.6.2016 அன்று பொன்னையாபுரம் ரயில்வே கேட் மேம்பாலத்திற்கு கீழ் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
இது குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உமாபதியை கைது செய்தனர். இந்த வழக்கு பரமக்குடி விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இறுதி விசாரணை முடிந்து நீதிபதி மலர் மன்னன், உமாபதிக்கு ஆயுள் தண்டணையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.