Categories
மாநில செய்திகள்

பிரசவத்தின் போது உயிரிழந்த தாய், குழந்தை – கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி காஞ்சனா, பிரசவத்திற்காக விஜயமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்தவர் இல்லாததால் காஞ்சனாவிற்கு செவிலியர் சுகன்யா என்பவரே பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது, குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், அசைவின்றி நின்றுவிட்டது. இதனால், அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கொண்டுச் சென்றனர். ஆனால், இச்சம்பவத்தில் பச்சிளம் குழந்தையும், தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அத்துடன், காஞ்சனாவின் கணவர் ராஜாவும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய பொறுப்பு தலைவரான துரை.ஜெயச்சந்திரன், மருத்துவர் பணியில் இல்லாததால் இருவர் உயிரிழந்தது மனித உரிமை மீறலாகும். எனவே, மனைவி, குழந்தையை இழந்துள்ள ராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களுக்குள் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பணியில் இல்லாத மருத்துவர் விஜயலட்சுமியிடம் 5 லட்சம் ரூபாய் வசூலிப்பதுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தார். நோயாளியை முறையாக கவனிக்காத, நான்கு மருத்துவ பணியாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நீதிபதி ஜெயசந்திரன், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Categories

Tech |