பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை போலீசார் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெருவுக்க்கடை பகுதியில் விக்கிரமன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் வேலை பார்த்த போது விக்கிரமனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் விக்கிரமன் கட்டாய ஓய்வு பெற்று மாதந்தோறும் 18,000 ரூபாயை ஓய்வூதியமாக பெற்றுள்ளார். இந்நிலையில் விக்கிரமனின் மகன்கள் நைசாக பேசி ஓய்வூதிய தொகை வரும் ஏ.டி.எம் கார்டை பெற்றுக் கொண்டு பணத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வங்கியில் சென்று விக்கிரமன் ஏ.டி.எம் கார்டை துண்டித்ததால் ஓய்வூதிய பலன்கள் நின்று விட்டது. பின்னர் மனைவியும், மகன்களும் விக்கிரமனை புறக்கணித்தனர்.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பணம் இல்லாமல் உணவுக்காக சிரமப்பட்ட விக்ரமன் கடந்த 2 1/2 அரை வருடங்களாக திங்கள் சந்தை பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது நிலைமையை பார்த்து சிலர் உணவு கொடுத்து வந்தனர். அந்த உணவை சாப்பிட்டுவிட்டு பேருந்து நிலையத்திலேயே விக்கிரமன் தங்கி விடுவார்.
இதுகுறித்து அறிந்த இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விக்கிரமனை மீட்டு முகச்சவரம் செய்து முடிவெட்டி புதிய ஆடைகளை அணிவித்து ஆட்டோவில் குளச்சல் துணைப்போ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து விக்கிரமன் புளியடியில் இருக்கும் முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி கூறும் போது, நின்று போன ஓய்வூதியம் மற்றும் வங்கி கணக்குகளை எல்லாம் சீரமைத்து அவருக்கு கிடைக்க வேண்டிய பணத்தொகைகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.