கேரள மாநிலம், குருவாயூர் கோயிலில் 245 ஜோடிகளுக்கு இன்று ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இந்த கோயிலில் திருமணம் செய்து கொண்டால் நீடித்த வாழ்க்கையும், ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் முகூர்த்த நாட்களில் இங்கு கேரளா மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து திருமணம் செய்து கொள்வார்கள். இந்த கோயிலில் திருமணம் செய்வதற்கு அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆவணி முதல் ஞாயிறான இன்று கோவிலில் திருமணம் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்ததால் கோவில் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டது. இதை கண்டித்து பக்தர்கள் சிலர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகளை தொடர்ந்து இன்று ஒரே நாளில் குருவாயூர் கோயிலில் 245 ஜோடிக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. அதிக கூட்டத்தின் காரணமாக திருமணத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.