மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, தக்கலை என்ற பெயரை, ஆங்கிலத்தில் THUCKALAY என எழுதுவதால் குழப்பம் ஏற்படுகிறது. அதை வெளியூரைச் சேர்ந்தவர்கள் துக்கலை, துக்காலே என மொழிபெயர்க்கிறார்கள். அதனால், THAKALAI என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அனைவருக்கும் நல்லது என்று, தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி பத்மநாபபுரம் நகராட்சி அனுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.