நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த பும்ரா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் பும்ரா 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 719 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். முஜீப் உர் ரஹ்மான் 3-வது இடத்தையும், ரபடா 4-வது இடத்தையும், பேட் கம்மின்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது