தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ”பெங்களூருவிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் நிகழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டம் ஒன்றை மே மாதம் 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மூன்று மாணவர்களை இணைய வழியில் தேர்வு செய்யவுள்ளது. தற்போது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ளும் தகுதி படைத்தவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே காலை இறைவணக்க கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.