தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்களுடன் கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த விவசாயியான பாலசண்முகம்(44) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு எதிரே இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பாலசண்முகம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாலசண்முகத்தின் உடலை மீட்டனர். பின்னர் விவசாயியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.